மகாராஷ்ட்ரா மாநில முதல்வர்-கவர்னர் மோதல்… எனக்கு நீங்கள் சான்றளிக்க தேவையில்லை என காட்டம்…
மகாராஷ்ட்ராவில் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள கோவில்களை திறக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கவர்னர்-முதல்வர் மோதல்.
மகாராஷ்ட்ரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில், ‘இந்துத்வாவின் தீவிர பக்தராக இருந்த நீங்கள் தற்போது வழிபாட்டு தலங்களை திறக்காமல் தள்ளி வைக்க தெய்வ வாக்கு எதையும் பெற்றீர்களா என்ற ஆச்சரியம் எனக்கு உள்ளது. அல்லது உங்களால் வெறுக்கப்பட்ட மதசார்பின்மைக்கு மாறிவிட்டீர்களா?. வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன‘ என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவர்னருக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எழுதி உள்ள கடிதத்தில், ‘திடீரென முழு ஊரடங்கை அமல்படுத்தியது சரியானது இல்லை. அதேபோல ஊரடங்கை முழுமையாக ஒரே நேரத்தில் தளர்த்துவதும் சரியாக இருக்காது. ஆம்… நான் இந்துத்வாவை பின்பற்றும் ஒருவன் தான். எனது இந்துத்வாவுக்கு நீங்கள் சான்றிதழ் அளிக்க தேவையில்லை. நீங்கள் கவர்னராக பதவி ஏற்ற அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சம் மதசார்பின்மை இல்லையா?’ என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க தீவிரமாக பரிசீலிப்பதாகவும் உத்தவ் தாக்கரே தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.