சூரப்பாவை பதவி நீக்கம் கோரி திமுக இளைஞர் (ம) மாணவரணி நாளை போராட்டம்…
சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நாளை அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன் போராட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திராவிட முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்று சொல்லி சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதா? உயர் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மாநில அரசிடம் இருக்கும் பல்கலைக்கழக, உயர் கல்வி உரிமையை இழக்க சம்மதிப்பதா? இடஒதுக்கீட்டிற்கும், மாநில நிதி உரிமைக்கும் எதிராக செயல்படும் பல்கலைகழக துனைவேந்தர் சூரப்பாவை தகுதிநீக்கம் செய்யாமல் இன்னும் அதிமுக அரசு வாய் பொத்தி மவுனிப்பதின் காரணம் என்ன? என்றும், எனவே, உடனடியாக சூரப்பாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டிலேயே இறுதி வரை தொடர வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன் போராட்டம் நடத்தும் என்றும், . எனவே வரவிருக்கும் தொடர் போராட்டத்தின் முன்னுரையாக நாளை (15ம் தேதி) வியாழன் காலை 10 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக தலைவரின் கட்டளைப்படி தி.மு.க. இளைஞரணியும், மாணவரணியும் நடத்தும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.