முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் முக்கிய பதவியில் நியமனம்… டெல்லி வட்டாரம் சலசலப்பு…
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின், தேசிய தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின், தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக இருந்த ஹரியானாவைச் சேர்ந்த, ரன்தீப் சுர்ஜேவாலா கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச் செயலராக, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.தற்போது, காங்கிரசின், பீஹார் சட்டசபை தேர்தல் நிர்வாக மற்றும் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பீஹார் சட்டசபை தேர்தல் முடிவடையும் வரை, அவர் அங்கு முகாமிட வேண்டிய நிலை ஏற்பட்டுஉள்ளது.
ஏற்கனவே, தகவல் தொடர்பு பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந்து, தன்னை விடுவிக்கும்படி, கட்சி மேலிடத்தில், ரன்தீப் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால், அந்த பொறுப்புக்கு தகுந்த தலைமையை நியமிப்பதில், கட்சி தலைமை காலம் தாழ்த்தி வந்தது. இதற்கு, முக்கிய காரணம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் அதிரடி பேச்சுக்கு, சாதுர்யமான பதில் அளிக்க, காங்கிரஸ் கட்சியில் சரியான தலைவர்கள் இல்லை’ என, கட்சி மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது. இதற்கு, சரியான அனுபவம் வாய்ந்த மூத்த தலைவரை நியமிப்பது குறித்து, டெல்லி தலைமை ஆழ்ந்த யோசனையில் உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் அல்லது ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரில் ஒருவரை, தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக நியமிக்க, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக, டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.