மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹.10,000 முன்பணமாக வழங்கப்படும்… மத்திய அரசு அறிவிப்பு…
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கினால் சரிவடைந்த பொருளாதாரத்தைச் சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடி ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதார நிதித் தொகுப்பை கடந்த மே மாதம் அறிவித்தார். இதுகுறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில்,‘ ‘ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ₹.10,000 வழங்கப்படுகிறது. இது, மாதம் ₹.1,000 வீதம் 10 மாத தவணையாக சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இதன் மூலம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் கூடுதலாக ரூ.19,000 கோடிக்கும், மாநில அரசுகள் இதனை செயல்படுத்தினால் அதன் ஊழியர்கள் ரூ.9,000 கோடிக்கும் பொருட்கள் வாங்குவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மாநிலங்களும், தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி, பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.
மேலும், மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு நான்காண்டுகளுக்கு ஒருமுறை விடுப்பு பயண சலுகை அளித்து வருகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக, இனிவரும் சமீப காலத்தில் யாரும் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்தாண்டு விடுப்பு பயண சலுகைக்கு பதிலாக கேஷ் வவுச்சர் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வரும் 2021 மார்ச் 31ம் தேதிக்குள் இதனைப் பயன்படுத்தி 12 சதவீதத்துக்கு அதிகமாக ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த தொகை கொண்ட ரூபே கார்டுகளும் கிடைக்கிறது. ஊழியர்கள் அவற்றையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதே நேரம், இந்த கேஷ் வவுச்சர்களை உணவகங்களில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.