ஹஜ் பயணம் மேற்கொள்ளும் சீனா முஸ்லிம்களுக்கு புதிய விதிகள் அறிவிப்பு – சீன அரசு
ஹஜ் பயணம் செய்வதற்கு சவுதி அரேபியாவுக்குச் செல்லும் சீனா முஸ்லிம்களுக்கு புதிய விதிகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவிற்கு ‘ஹஜ்’ பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு சீனா புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த யாத்திரை நாட்டின் இஸ்லாமிய சங்கத்தால் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், யாத்ரீகர்கள் சீன சட்டங்களை பின்பற்றி மத தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் சுமார், 20 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். அதில், பெரும்பாலும் உய்குர்கள் – துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இனக்குழு மற்றும் சீன இன வம்சாவளியைச் சேர்ந்த ஹுய் முஸ்லிம்கள் ஆவர். அந்த வகையில், உய்குர்கள் மற்றும் ஹுய் முஸ்லிம்களில் சுமார் 10 மில்லியன் மக்கள் தொகை கொண்டவர்கள் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 சீன முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.
ஹஜ் யாத்திரைக்காக வெளியிடப்பட்ட புதிய ஒழுங்குமுறை மொத்தம் 42 பக்கங்களை கொண்டுள்ளது. அதில், சீன முஸ்லிம்களின் யாத்திரை சட்டங்களின்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சீன இஸ்லாமிய சங்கம் மட்டுமே சீன முஸ்லீம்களுக்கு ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு செய்ய அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பாகும்.
அதே நேரத்தில், வேறு எந்த அமைப்பும் அல்லது தனிநபரும் பயணங்களை ஒழுங்கமைக்கக் கூடாது. ஹஜ் விண்ணப்பிக்கும்போது சீன குடிமக்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். டிசம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் இந்த விதிமுறையை அறிவிக்கிறது என்று சீன அரசின் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.