வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து இவைகள் சட்டமாக அமலுக்கு வந்தது . இந்த வேளாண் சட்டங்களுக்கு, எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது, சட்டவிரோதமானது, செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக எம்பி திருச்சி சிவா, ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ்குமார் ஜா, வக்கீல் மனோகர் லால் சர்மா, சத்தீஷ்கார் கிசான் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது இந்த மனுக்கள் தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.