இழிசெயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் -மு.க.ஸ்டாலின்

பட்டியலின மக்கள் உரிய அதிகாரம் பெற்று, சமுதாயத்தின் அங்கீகாரத்தை நிரந்தரமாகப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி. அண்மையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தெற்குதிட்டை ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா செய்யப்பட்டார். பின்பு சிந்துஜாவை புவனகிரி காவல்துறை கைது செய்தது.மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாக உள்ளார்.இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிதம்பரம் அருகில் உள்ள தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயக நெறிகளையொட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஊராட்சி மன்றத் தலைவர், தரையில் அமர்ந்திருக்கும் அந்தப் படம், பொதுவாழ்வில் இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள தலைகுனிவு. சமத்துவத்திற்கும் – ஜனநாயகத்திற்கும் எதிரான இதுபோன்ற இழிசெயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை.
பட்டியலின மக்கள் உரிய அதிகாரம் பெற்று, சமுதாயத்தின் அங்கீகாரத்தை நிரந்தரமாகப் பெற வேண்டும்; மற்ற அனைவர்க்கும் இணையாக முன்னேற்றம் அடைந்திட வேண்டும்; என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக நீண்ட நெடுங்காலமாகப் போராடியும் – ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம் – அந்த அதிகாரத்தை அவர்களுக்குப் பகிர்ந்தளித்து, சமூகநீதியைத் தொடர்ந்து நிலைநாட்டி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.