நான் விவசாயி என்று சொன்னதில்லை.. விவசாயிகளின் கஷ்டத்தை அறிவேன் ..ஸ்டாலின் ..!
கள்ளக்குறிச்சி முப்பெரும் விழாவில் காணொலி மூலம் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின், நான் விவசாயி என்றோ, விவசாயம் செய்வதாகவோ சொன்னேனா.? இல்லையே. விவசாயிகளின் கஷ்டம் தெரிவதற்கு விவசாயியாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. விவசாயத்தின் மீது, விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் போதும். அது என்னிடம் இருக்கிறது.
விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருப்பதால் தான் அந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராக நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் – மக்களவையிலும் பேசினோம். கண்டித்தோம். எதிர்ப்புத் தெரிவித்தோம். உடனடியாக தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளோம் என தெரிவித்தார். கடந்த நான்காண்டுக் காலமாக ஆட்சி நடக்கவில்லை. அ.தி.மு.க. என்ற கட்சியைக் கோட்டையில் வைத்து நடத்திக் கொண்டு இருந்தார்கள். முதலில் – பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் சண்டை!அடுத்து – பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் சண்டை!பின்னர் – பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் சண்டை!அதற்கடுத்து – பன்னீர்செல்வத்துக்கும் பழனிசாமிக்கும் சண்டை! இதுதான் நான்காண்டு காலமாக தமிழ்நாட்டில் நடக்கிறது.
எப்போது யார் காலை வாருவார்கள் என்ற பயத்திலேயே ஆட்சி ஓடுகிறது என தெரிவித்தார்.