பாகிஸ்தானில் 380 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
பாகிஸ்தானில் 380 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் தீவிரம் அடைந்து கொண்டே செல்லும் கொரானா வைரஸ் தாக்கம் தற்போது பாகிஸ்தானில் தனது வீரியத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் 12ம் தேதியிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி வரைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 380 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் 29 மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளத 46 அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமல் பள்ளிகள் நடத்தப்படுவதாக 800க்கும் மேற்பட்ட பள்ளிகள் மீதும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் 1,039 பள்ளிகளில் கை கழுவும் வசதிகள் இல்லை எனவும், 807 பள்ளிகளில் வகுப்பறைகள் கிருமி நீக்கம் செய்யப்படவில்லை எனவும், 1,204 பள்ளிகளில் சுத்தமான கழிப்பறைகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.