48 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி..! புள்ளி பட்டியலில் முதலிடம் ..!
இன்று நடைபெற்ற 13-வது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது.இப்போட்டி அபுதாபியில் உள்ள ஷேய்க் சையத் கிரிக்கெட் மைதானத்தில் ( Sheikh Zayed Stadium) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி கோக் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே குயின்டன் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.பிறகு இறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் பெவிலியன் திருப்பினார்.
இதையடுத்து, இறங்கிய இஷான் கிஷன் 28 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 70 ரன்கள் விளாசினார். மத்தியில் களம் கண்ட பொல்லார்ட் 47 , ஹார்திக் 30 ரன்களுடன் களத்தில் நின்றனர். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் குவித்தனர்.
192 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்க சிறப்பாக விளையாடி வந்த மாயங்க் அகர்வால் 25 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய கருண் ரன் எடுக்காமல் வெளியேற , நிதானமாக விளையாடிய லோகேஷ் ராகுல் 17 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பஞ்சாப் அணி பரிதாபமாக இருந்த நிலையில் நிக்கோலஸ் பூரன் 44 ரன்கள் விளாசினார். பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.