அமெரிக்க தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசி தயாராக வாய்ப்பில்லை – மாடர்னா நிறுவனம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 7,451,354 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 211,805 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா கொரோனாவிற்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து இந்த நிறுவனம் கூறுகையில், நவம்பர் 25 க்கு முன் தடுப்பூசி அங்கீகாரத்தை பெறுவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.
அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க தேர்தலுக்கு முன்பு தடுப்பூசி தயாராகும் என்று வெளியிட்டுள்ள அறிக்கையை இந்த தகவலானது கேள்விக்குறியாக்கி உள்ளது. இது குறித்து நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீபன் பான்சல் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் நவம்பர் 25 க்கு முன்பு தடுப்பூசி மாதிரி சோதனை முடிவுகளின் தரவுகள் பெறப்பட்டு, உணவு மற்றும் மருந்து துறைக்கு அனுப்பப்படும் என்றும், தடுப்பூசி பாதுகாப்பு தரவுகள் நல்ல முறையில் வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நவம்பர் 1-ம் தேதிக்குள் நல்ல முடிவுகள் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ள நிலையில் அதிகாரபூர்வமான தடுப்பூசியை கொண்டுவர போதுமான தரவுகள் எடுக்கப்படாததால் தான் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும், தேர்தல் நாளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும், எங்கள் செயல் முறையின் படி போதுமான தரவுகள் கிடைத்து விட்டால் தேர்தலுக்கு முன்பே கூட தடுப்பூசி நடைமுறைக்கு வரலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.