பெங்களூரில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட தமிழக சீர்மிகு காவல்துறையினர்…
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து கடத்தப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை தற்போது தமிழகத்தில் உள்ள களியக்காவிளையில் மீட்டக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜோசப் ஜான் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் களியக்காவிளை சோதனை சாவடியை கடந்து சென்றுள்ளார். அப்போது அவர்களுடன் இருந்த இரண்டரை வயது பெண் குழந்தை லோகிதா தொடர்ந்து அழுவதை பார்த்த காவல்துறையினர் ஜோசப் ஜான் மற்றும் அவரது மனைவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பெண் குழந்தை தங்களுடையது என்று தெரிவித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த தம்பதியுடன் இருந்த 6 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தினர். கடந்த 25 தினங்களுக்கு முன்பு பெங்களுருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்த குழந்தையை ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கடத்தி வந்ததாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளான். இதை தொடர்ந்து அந்த குழந்தைகளை காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறையினர், அந்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.