நெருக்கடியில் சிக்கிதவிக்கும் எல்ஐசி : 25% பங்குகளை விற்க ரெடியாகும் மத்திய அரசு…!
நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையை 3.5 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இதற்கிடையே கொரோனாவால் வருவாய் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளதால் அதனால் ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எல்ஐசியில் (இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்) உள்ள 25 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்து மற்றும் பங்குகள் விற்பனை மூலமாக சுமார் 2.1 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.
ஆனால், கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 5,700 கோடி மட்டுமே திரட்டப்பட்டு உள்ளது. தற்போது எல்ஐசி நிறுவன பங்குகளை விற்க வசதியாக சட்ட திருத்தங்களில் மாற்றம் செய்யவும், இதற்காக நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறினார். நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்க முடிவு எடுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.