கொரோனா வந்தால் நேராக சென்று மம்தாவை அனைத்துக் கொள்வேன் -பிஜேபி செயலாளர் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம்

கொரோனாவில் நான் பாதிக்கப்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டி அணைத்துக் கொள்வேன். என்று பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ராவின் கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது.

சமீபத்தில் தான் பாஜக அனுபம் ஹஸ்ராவை தேசியச் செயலாளராக நியமித்தது. இந்நிலையில் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக சிலிகுரி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பாரூபூரில் பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சியில் தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ரா பங்கேற்றார்.

அப்போது அவர்  பேசும் போது நம்முடைய தொண்டர்கள் கொரோனாவை விட மிகப்பெரிய எதிரியுடன் போரிட்டு வருகிறார்கள். மம்தா பானர்ஜியுடன் அவர்கள் போரிட்டு வருகிறார்கள். மம்தா பானர்ஜியுடன் முகக்கவசம் இல்லாமல் நமது தொண்டர்களால் போரிட முடியும் என்றால், கொரோனா வைரஸுக்கு எதிராகவும், நம்மால் முகக்கவசம் இல்லாமல் போரிட முடியும்.

நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். நான் கொரோனாவில் பாதிக்கப்பட்டால் நேராக மம்தா பானர்ஜியைச் சந்தித்து அவரைக் கட்டி அணைத்துக்கொள்வேன். அப்போது தான் மாநிலத்தில் கொரோனா நோயாளியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு மிகவும் பரிதாபத்துகுரிய வகையில் நடக்கிறது என்பது பற்றி தெரியும்.

கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை மம்தா மோசமாக நடத்துகிறார். உயிரிழந்தவர்களின் உடல்கள் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்படுகின்றன. உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மகன், மகள் பார்க்கக் கூட அனுமதியில்லை. நாய், பூனையைக் கூட இவ்வாறு நாம் நடத்தியதில்லை என்று பேசினார்.

இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாகப் பேசிய அனுபம் ஹஸ்ரா குறித்து சிலிகுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகதோ ராய் இது குறித்து கூறுகையில், பாஜக தலைவர்கள் வாயிலிருந்துதான் இதுபோன்ற தரம் கெட்ட வார்த்தைகள் வரும். இதுதான் அக்கட்சியின் மனநிலை. இதுபோன்ற கருத்துகளை திரிணமூல் காங்கிரஸ் மிகவும் கண்டிக்கிறது.

ஹஸ்ராவுக்கு எதிராக போலீஸில் புகார் அளி்க்கப்பட்டுள்ளது. விரைவாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளதாக தெரிவி்த்தார்.

Anupam Hazra in Bengali News: BJP leader Anupam Hazra threatens CM Mamata Banerjee ।Sangbad Pratidin

சிலிகுரியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், ஹஸ்ராவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய நிலையில் சிலிகுரி போலீஸில் புகார் குறித்து அனுபம் ஹஸ்ரா கூறுகையில் மம்தா பானர்ஜி பல முறை பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். நான் கூறிய கருத்துகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டால், மம்தா கூட தவறாகப் பல முறை பிரதமர் மோடியைப் பற்றிப் பேசி உள்ளார்.என் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது 10 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

author avatar
kavitha