ஐ.நாவில் இன்னமும் எத்தனை நாள் தான் இந்தியாவை ஒதுக்கிவைப்பீர்கள்… மோடி கேள்வி…
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின், 75ம் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்று, பேசி வருகின்றனர். எனவே உலகத்தலைவர்கள், தங்கள் உரையை முன்கூட்டியே, ‘வீடியோ’ வில் பதிவிட்டு அனுப்பி வைக்கின்றனர். இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி நேற்று பேசியதாவது, ஐக்கிய நாடுகளின் நிறுவன உறுப்பினர்களில், இந்தியாவும் ஒன்று என்பதில் பெருமைப்படுகிறோம், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில், 130 கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், அவர்களது பிரதிநிதியாக பங்கேற்கிறேன்.
கடந்த, 75 ஆண்டுகளில், உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின், சபை துவங்கிய போது இருந்ததை விட, உலகம் தற்போது பல மாறுபட்ட காலத்திற்கு வந்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப, ஐக்கிய நாடுகள் சபை, தன் செயல்பாடுகளை மாற்ற வேண்டியுள்ளது அவசியம் ஆகும். மாறும் காலங்களில் நாமும் மாறாவிட்டால், மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சிகளும் வெற்றி பெறாமல் போய்விடும். எனவே ஐக்கிய நாடுகள் சபையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இந்தியா நீண்டகாலமாக காத்திருக்கிறது. இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்என தெரியவில்லை. ஐக்கிய நாடுகளின் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு, உலகின் மிகப் பெரிய நாடான இந்தியா ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும்? என்று தெரியவில்லை இவ்வாறு, பிரதமர் பேசினார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே, ‘இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தியாவை ஒதுக்கி வைப்பீர்கள்’ என, பிரதமர் பேசியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.