சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மேல்சாந்தி தேர்வு அக்,.17 என தேவஸ்தானம் அறிவிப்பு…

சபரிமலை ஐய்யப்பன் கோவில் மேல்சாந்தி தேர்வு அக்டோபர் 17ஆம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் நடக்கிறது.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அனைத்து பூஜைகளுக்கும் தலைமை வகிப்பவர் தந்திரி. இவர்கள் தாழமண் குடும்பத்தில் கண்டரரு ராஜீவரரு, கண்டரரு மகேஷ் மோகனரரு ஆகியோர் சுழற்சி முறையில் இதை கவனிக்கின்றனர். இவர்களுக்கு உதவியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு மேல்சாந்தி நியமிக்கப்படுவார். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட தற்போதைய மேல்சாந்தி சுதிர் நம்பூதிரியின் பதவி காலம் வரும் அக்., 16ம் தேதி நிறைவு பெறுகிறது.இந்நிலையில் அடுத்த மேல்சாந்தியை தேர்வு செய்வதற்கான பணிகள் தற்போது துவங்கி உள்ளன. இதற்கான நேர்காணல் வரும் அக்டோபர் 5 மற்றும்  6 தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

இதில் வெற்றி பெறுபவர்களில் ஒருவர் அக்டோபர்  17-ல் சபரிமலை சன்னிதானத்தில் நடக்கும் குலுக்கல் தேர்வில் தேர்வு செய்யப்படுவார். இவர் கார்த்திகை, 1ம் தேதி முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையிலேயே  தங்கி பூஜைகள் செய்வார். மாளிகைப்புறம் கோவிலுக்கும் இதே முறையில் மேல்சாந்தி தேர்வு நடைபெறும். இந்நிலையில், ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில்  நடை வரும்  அக்டோபர் 16ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha