திருவாரூரில் ONGC குழாய் உடைந்து எண்ணெய் கசிவு – விவசாய நிலங்களில் பரவி பயிர்கள் நாசம்!
திருவாரூரில் ONGC குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், விவசாய நிலங்களில் பரவி பயிர்கள் நாசமடைந்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் பல இடங்களில் கச்சா எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் கச்சா எண்ணெய் எடுக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு நிலத்தடியில் பதிக்கக்கூடிய கச்சா எண்ணெய் குழாய்கள் சில எதிர்பாராத சம்பவங்களால் பாதிக்கப்பட்டு அந்த குழாய்களில் உடைப்பு ஏற்படும் போது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறி அந்த நிலப் பகுதிகள் பாதிப்படைவது வழக்கம். இவ்வாறு பாதிக்கப்படக்கூடிய விளைநிலங்களுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் இழப்பீடும் வாடிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோல தற்பொழுது திருவாரூர் மாவட்டத்திலுள்ள எருக்காட்டூர் எனும் பகுதியில் விளை நிலத்தின் கீழ் பதிக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்து அதிலுள்ள கச்சா எண்ணெய் தனசேகரன் எனும் விவசாயிக்கு சொந்தமான விளை நிலம் முழுவதும் பரவியதால் 30 நாட்கள் ஆன சம்பா பயிர்கள் அனைத்தும் பாழாகி உள்ளது. இதனை அடுத்தடுத்து உள்ள பயிர்களுக்கும் எண்ணெய் பரவியதால் அங்கு பயிரிடப்பட்டிருந்த அனைத்து பயிர்களும் நாசம் ஆகியுள்ளது. தகவலறிந்த அவ்விடத்திற்கு வந்த ஓஎன்ஜிசி ஊழியர்கள் பாதிக்கப்பட்ட வயலில் தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 வருடத்திற்கு முன்பு அதே இடத்தில் இந்த குழாய் உடைப்பு ஏற்பட்டதாகவும், அப்பொழுது 5 ஏக்கர் நாசமானதாகவும் ஆனால் நஷ்ட ஈடு இன்னும் கொடுக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இப்போது ஏற்பட்டுள்ள உடைப்பால் தனக்கு 11 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அந்த இழப்பை தராத பட்சத்தில் நீதிமன்றத்தில் தடை வாங்கி, விவசாய நிலத்தில் உள்ள அனைத்து குழாய்களையும் அப்புறப்படுத்துவோம் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.