5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது…
இங்கிலாந்து கடற்படையில் இருந்து ‘எச்.எம்.எஸ். ஹெர்ம்ஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த விமானந்தாங்கி போர்க்கப்பலை, இந்தியா கடந்த 1986-ம் ஆண்டு விலைக்கு வாங்கி ஐ.என்.எஸ். விராத் என்ற பெயரில் இந்திய கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தது. சுமார் 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய இந்த கப்பல் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டது. பின்னர் இதை அருங்காட்சியமாகவோ அல்லது உணவு விடுதியாகவோ மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகள் கைகூடாததால், ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டு விற்கப்பட்டது. இதை ரூ.38.54 கோடிக்கு குஜராத்தை சேர்ந்த ஸ்ரீராம் குரூப் நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.இந்திய கடற்படையில் இருந்த காலத்தில் ஆபரேஷன் ஜூபிடர், பராக்ராம், விஜய் ஆகிய நடவடிக்கைகளில் ஐ.என்.எஸ். விராத் முக்கிய பங்காற்றி உள்ளது. மேலும் சர்வதேச கடற்படை பயிற்சிகள் பலவற்றில் பங்கு கொண்டுள்ளது.
ஐ.என்.எஸ். விராத், கடைசியாக விசாகப்பட்டினத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றது. 25 விமானங்கள், 1500 வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சுமந்து செல்லும் திறன் பெற்ற இந்த போர்க்கப்பல், மிதக்கும் நகரம் என அழைக்கப்பட்டது. இங்கிலாந்து ராயல் கடற்படையில் 1959-ல் சேர்க்கப்பட்ட இந்த போர்க்கப்பல் மொத்தமாக 2,258 நாட்கள் கடலில் இருந்துள்ளது. 5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ளது. ஐ.என்.எஸ். விராத் இந்தியாவில் உடைக்கப்படும் 2-வது விமானந்தாங்கி கப்பல் ஆகும். முன்னதாக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் கடந்த 2014-ம் ஆண்டு மும்பையில் உடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.