#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று கூறியிருந்தார்.சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எனவே நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதினார்.இதன் பின் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு முன்னாள் நீதிபதிகள் 6 பேர் கடிதம் எழுதினர்.முன்னாள் நீதிபதிகளான சந்துரு ,பாஷா ,சுதந்திரம்,கண்ணன்,ஹரிபரந்தாமன் ,அக்பர் உள்ளிட்டோர் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதத்தில்,சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுள்ள நிலையில், சூர்யா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.மேலும் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியத்தின் கோரிக்கையை நிராகரித்தது தலைமை நீதிபதி அமர்வு.