108 வர தாமதமானதால் பரிதாபமாக போன உயிர் – போராட்டத்தில் ஈடுபட்ட கிராம வாசிகள்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ள ரெங்கம்மாள் சத்திரம் எனும் கிராமத்தில் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பால்ராஜ் என்பவரை மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் வண்டியை சாலையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் விபத்தில் படுகாயமடைந்த பால்ராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் துடிதுடித்து கிடந்துள்ளார், இதனை பார்த்த அப்பகுதி மக்கள் 108 க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் தெரிவித்த ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் 108 ஆம்புலன்ஸ் விபத்து நடந்த இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் மரங்களை போட்டு புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு தாமதமாக விபத்து நடந்த இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும்ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களையும் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர்.