மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தங்கவேல் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்.!

Default Image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தங்கவேல் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலுக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. இதன் காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். கே.தங்கவேல், 2011 முதல் 2016 வரை திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

இவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.தங்கவேல் அவர்கள் மறைவெய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து தொழிலாளியாக தொழிற்சங்கத் தலைவராக உயர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒன்றுபட்ட கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி செயலாளராக 11 ஆண்டுகள் செயல்பட்ட அவர், மாநிலச் செயற்குழு உறுப்பினராவர். 2011-16ல் திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற அவர் – மக்களின் கோரிக்கைகள் நிறைவேற சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர். தொழிலாளர்களுக்காக திருப்பூரில் அவர் நடத்திய “127 நாட்கள்” நீண்டதொரு போராட்டம், இன்றும் குறிப்பிடத்தக்க தொழிலாளர் உரிமைப் போராட்டமாக இருக்கிறது.

அடித்தட்டு மக்களை குறிப்பாக, தொழிலாளர் வர்க்கத்தைப் பாதிக்கும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்த தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சிந்தனையாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இழந்து தவிக்கிறது. அவரை இழந்து துயரத்தில் இருக்கும் அவரது துணைவியார் திருமதி சாந்தி அவர்களுக்கும் மற்றும் அவரது மகள்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்