பத்திரிகை பயணத்தில் முத்திரை பதிக்காத துறைகளே இல்லை.. சுதாங்கன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்.!
மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் அவர்கள் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் பொறுப்பாசிரியராக இருந்தவர், பத்திரிகையாளர் சுதாங்கன். இவர் தினமணி நாளேடு, தமிழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்களில் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார். அதுமட்டுமின்றி, பல தொலைக்காட்சிகளிழும் அவர் பணியாற்றி வந்தார்.
இவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இவரது மறைவு குறித்து பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். அதில், மூத்த பத்திரிகையாளரும், ஜூனியர் விகடன், தினமணி, தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னணிப் பத்திரிகைகளில் ஆசிரியராகவும் இருந்த திரு. சுதாங்கன் அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கும், வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘திசைகள்’ பத்திரிகையில் தனது பயணத்தைத் தொடங்கிய திரு. சுதாங்கன் அவர்கள் முத்திரை பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஏறக்குறைய 42 ஆண்டுகள் பத்திரிகை அனுபவம் உள்ள அவரின் ‘தேதியில்லாத டைரி’ புத்தகம் படிக்கப் படிக்கத் தகவல் சுரங்கம் போன்றது.
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களுடன் திரைத்துறையில் பணியாற்றியவர் நடித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமானவர் என்னிடம் மிகுந்த அன்பு பாராட்டியவர்.
மூத்த பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையுலகம் இழந்திருப்பது பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகனுக்கும் உறவினர்களுக்கும் அவரோடு பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கும் திரைத்துறையினருக்கும் அவரின் கருத்துகளின் பால் ஈர்க்கப்பட்டிருந்த வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.