தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமா? – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!
பள்ளிகள் திறக்கப்படுவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இது குறித்து எந்த தகவலும் வரவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கோபிச்செட்டிப் பாளையத்தில் முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு முதியோர் உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், வரும் அக்டோபர் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், பள்ளிகள் திறக்கப்படுவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இது குறித்து எந்த தகவலும் வரவில்லை. வந்தால் தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர். கடந்த ஆண்டை விட அதிக மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த மாதம் கடைசி வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். பெற்றோர் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க படையெடுத்து வருகிறார்கள். மேலும், முழுமையாகவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் முதல்வரின், அரசின் கொள்கை முடிவு.
நாளை 238 மையத்தில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதனை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் எழுதுகிறார்கள். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது. நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி நிவாரணம் உதவி வழங்கியுள்ளார். வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற உத்தரவாதமும் தரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.