காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் அளவை 2 மடங்காக உயர்த்த வேண்டும்! ராமதாஸ்

Default Image
காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் அளவை 2 மடங்காக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் வரலாறு காணாத அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருப்பதால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் கொள்முதல் நிலையங்கள் திணறி வருகின்றன. கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல் சாலைகளில் கொட்டி வைக்கப்படுவதால் மழையில் நனைந்து வீணாகும் ஆபத்து உருவாகியுள்ளது; இது தடுக்கப்பட வேண்டும்.மேட்டூர் அணையிலிருந்து கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் தான், காவிரி டெல்டாவின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடி செய்யப் பட்டுள்ளது.
காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் முதலில் மதிப்பிடப்பட்டிருந்தாலும் கூட, உண்மையில் 4 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. குறுவை நடவு முன்கூட்டியே செய்யப்பட்டதால், அறுவடையும் மிகப்பெரிய பரப்பளவில் முன்கூட்டியே தொடங்கி விட்டது தான் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வந்து குவிவதற்கு காரணம் ஆகும்.காவிரி பாசன மாவட்டங்களின் நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல் எதிர்பாராதது என்பது உண்மை தான். ஆனால், இது தீர்க்க முடியாத சிக்கல் அல்ல. தமிழக அரசு நினைத்தால் அடுத்த இரு நாட்களில் அனைத்து சிக்கல்களையும் தீர்த்து விட முடியும். வழக்கமாக நெல் கொள்முதல் நிலையங்களில் 1000 நெல் மூட்டைகளை மட்டும் தான் இருப்பு வைக்க முடியும். அதைக் கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு 1000 நெல் மூட்டைகள் மட்டும் தான் கொள்முதல் செய்யப்படும். அந்த மூட்டைகள் அடுத்த நாள் காலையில் அங்கிருந்து கிடங்குக்கோ, அரிசி ஆலைக்கோ கொண்டு செல்லப் பட்டவுடன், அடுத்த நாளுக்கான நெல் கொள்முதல் தொடங்கும். ஆனால், இப்போது ஒரு நாளைக்கு 2000 மூட்டைகளுக்கும் கூடுதலான நெல்லை உழவர்கள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருவதால், அவற்றை முழுமையாக கொள்முதல் செய்ய முடியவில்லை; அதற்கான கட்டமைப்பும் இல்லை.
அதனால், விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்லை சாலைகளில் கொட்டி வைத்துள்ளனர்.
காவிரி பாசன மாவட்டங்களில் திடீர் திடீரென மழை பெய்வதால், நெல் நனைந்து வீணாகி விடுகிறது. இது உழவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நெல்லின் ஈரப்பதம் 17 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அதை கொள்முதல் செய்ய முடியும். மழையில் நனைந்த நெல்லின் ஈரப்பதம் 17 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருக்கும் என்பதால், அதை விற்பனை செய்ய முடியாது. நனைந்த நெல்லை அதே பகுதியில் ஓரிரு நாட்கள் காய வைத்த பிறகு தான் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியும். அதனால் உழவர்களுக்கு நேர இழப்பு, நெல் எடை இழப்பு, கூடுதல் செலவு ஆகியவை ஏற்படுகின்றன. கூடுதல் விளைச்சலால் கிடைக்கும் லாபத்தை இவை பறித்து விடுகின்றன.
குறுவை பருவ அறுவடை கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தொடங்கியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல்லின் அளவு அதிகரிக்கக்கூடும். தென்மேற்கு பருவமழை சில வாரங்களில் விடைபெறும் என்பதால், கடைசி நாட்களில் கடுமையான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை நிலைமை மேலும் மோசமாக்கி விடக் கூடும்.
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அளவை இரட்டிப்பாக்குவதன் மூலமாக மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். இது கடினமான செயல் அல்ல. கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணியாளர்கள் மற்றும் கட்டமைப்புகளை அதிகரித்து அதிக நெல்லை கொள்முதல் செய்தல்; அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக அங்கிருந்து கிடங்குகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகள் கொண்டு வரும் நெல் தேங்குவதை தவிர்க்க முடியும். காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை அதிகம் நடைபெறும் இடங்களில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களை அமைப்பதன் மூலம் அறுவடை செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும். இதற்கு சற்று கூடுதல் செலவு ஏற்படக்கூடும். ஆனால், நெல் மழையில் நனைவதால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பு, மன உளைச்சலுடன் ஒப்பிடும் போது இது பெரிதல்ல.
எனவே, காவிரி பாசன மாவட்டங்களின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் சூழலுக்கு ஏற்ப கூடுதல் நெல் கொள்முதல் செய்தல், தற்காலிக கொள்முதல் நிலையங்களை அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்வதன் மூலம் நெல் கொள்முதலை இரட்டிப்பாக்க வேண்டும். அதன் மூலம் டெல்டா உழவர்களுக்கு ஏற்படும் இழப்புகளைத் தவிர்த்து அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்