பள்ளிகளை திறக்க அனுமதி ! வழி காட்டு நெறிமுறைகள் என்னென்ன ?
செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், 4 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பள்ளிகளை திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது .
வழி காட்டு நெறிமுறைகள் :
- செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் ஆலோசனை பெறலாம்.
- 6 அடி தனிமனித இடைவெளியை மாணவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிகளில் எச்சில் துப்புவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
- கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை, பெற்றோரின் ஒப்புதல் பெற்ற பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் ஆலோசனை பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கு வரும் மாணவர்கள் பேனா,பென்சில்,அழிப்பான்,நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவற்றை பகிர்ந்துக்கொள்ளக்கூடாது.
- வகுப்பறைகளுக்குள் கொரோனாவை தடுக்க பள்ளிகளில் வெவ்வேறு கால அட்டவணைகள் பின்பற்ற வேண்டும்.பள்ளிகளை தொடங்குவதற்கு முன்னர் முழுவதுமாக சுத்தப்படுத்த வேண்டும்.பள்ளியில் உள்ள வருகைப் பதிவேட்டை தொடுதல் இல்லாத வகையில் பயன்படுத்த வேண்டும்.
- பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள்,வாழிபாடுகள்,விளையாட்டுகள், மாணவர்கள் கூடுதல் உள்ளிட்டவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.பள்ளிகளில் முடிந்த அளவு இயற்கையான காற்றைச் சுவாசிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள நீச்சல் குளங்களை திறக்க அனுமதி கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.