கிசான் நிதி முறைகேட்டை கண்டறிந்தது தமிழக அரசு தான் – முதலமைச்சர் பழனிசாமி
கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுவரை தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு சென்று ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, அதற்கான உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
இந்நிலையில், இன்று 20-வது மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் சென்றுள்ளார். அங்கு முதல்கட்டமாக திருவண்ணாமலையில் ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் 16 துறைகள் சார்பில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். மேலும், ரூ.19.20 கோடியில் 11 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து, அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து பேசிய முதல்வர், கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம் என்று கூறினார். கடந்த 4 மாதத்தில் 41 லட்சத்தில் இருந்து 46 லட்சமாக விவசாயிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கிசான் திட்ட முறைகேட்டில் தற்போது 18 பேர் கைது, 81 ஒப்பந்த பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 13 மாவட்டங்களில் கடந்த 4 மாதத்தில் இந்த முறைகேடு நடந்துள்ளது. இந்நிலையில், கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.