புதிய 11 திட்ட பணிகள்: ரூ.19.20 கோடி மதிப்பு.! முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.!
முதல்கட்டமாக திருவண்ணாமலையில் ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி. அந்த வகையில், இதுவரை தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு சென்று ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, அதற்கான உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
இந்நிலையில், இன்று 20வது மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் சென்றுள்ளார். அப்போது, முதல்கட்டமாக திருவண்ணாமலையில் ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் 16 துறைகள் சார்பில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். அம்மாவட்டத்தில் ரூ.19.20 கோடியில் 11 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து, அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், அரசின் நடவடிக்கையால் தொற்று தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையிலும், அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கிரிவலம் செல்பவர்களுக்கு சாலை வசதி, நிழற்கூடம் உள்ளிட்ட வசதிகளை அதிமுக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கிரிவலம் செல்பவர்கள் தங்கிச் செல்ல யாத்ரி நிவாஷ் திட்டமும் முடியும் தருவாயில் உள்ளது. திருவண்ணாமலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். இதன்பின் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.