அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை உட்பட வாரத்தின் 6 நாட்களும் பணி நாட்கள்-தமிழக அரசு உத்தரவு.!
அரசு அலுவலகங்களில் 100 சதவீத ஊழியர்களுடன் சனிக்கிழமை உட்பட வாரத்தின் 6 நாட்களும் பணி நாட்கள் என்று கூறி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அனைத்து பணிகளும் முடக்கப்பட்டிருந்தது. இதனால் அரசு பல்வேறு இழப்புகளை சந்தித்தது என்று கூறலாம். அதனை ஈடுகட்ட கடந்த மே 3-ஆம் தேதி அரசு அலுவலகங்களில் 33 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம் என்று உத்தரவிடப்பட்டது. அதனையடுத்து தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50% ஊழியர்களை கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி செயல்பட கடந்த மே 18 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி சனிக்கிழமை உட்பட 6 நாட்களையும் பணி நாட்களாக அரசு அறிவித்து ஊழியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டது. அதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழகத்தில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அரசு அலுவலகங்களில் 100 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளித்ததுடன், சனிக்கிழமைகளிலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்றும், 100 சதவீத ஊழியர்களும் பணியாற்றுவதால் சுழற்சி முறையை ரத்து செய்வதாகவும் உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் முடக்கப்பட்டிருந்த அனைத்து அரசு பணிகளையும் விரைவுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வருவதாக கூறி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்ப, அவர்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சுற்றுகை அனுப்பினர்.
அதில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்கனவே இழந்த வேலை நேரத்தை ஈடு செய்ய சுழற்சி முறைப்படி சனிக்கிழமை உட்பட 6 நாட்களிலும் 50 சதவீத ஊழியர்களை கொண்டு அரசு அலுவலகங்களை நடத்த மே. 15 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து ஆகஸ்ட் 30ஆம் தேதி அனைத்து கொரோனா வழிப்பாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி 100 சதவீத ஊழியர்களை கொண்டு செயல்படவும், , அதன்படி செப்டம்பர் 5-ஆம்(நேற்று) தேதி முதல் டிசம்பர் 31 -ஆம் தேதி சனிக்கிழமை உட்பட வாரத்தின் 6 நாட்களும் பணி நாட்கள் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் அலுவலகத்தை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துவதற்காக விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.