தேசிய கல்விக்கொள்கை ! ஆளுநர்களிடம் கருத்து கேட்பதை பிரதமர் மோடி கைவிட வேண்டும் – மு.க ஸ்டாலின்

Default Image
புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து  குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்பு – ஆளுநர்களிடம் கருத்து கேட்க முனையும்  நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயலை பிரதமர் மோடி கைவிடவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள  அறிக்கையில்,நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ள நிலையில், அங்கே விவாதங்கள் இடம்பெறும் வரை பொறுத்திருக்காமல், அவசரம் அவசரமாக, செப்டம்பர் 7-ம் தேதி அன்று ஆளுநர்கள் மாநாட்டைக் கூட்டி, புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து குடியரசுத் தலைவரும், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும், கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் அவர்களும், ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்க முனைவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல் என்பதால், அது ஏற்புடையதல்ல.
புதிய தேசியக் கல்விக் கொள்கை வெளியிடுவதற்கு முன், மாநிலக் கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் மத்திய ஆலோசனை வாரியம் (Central Advisory Board of Education) என்ற அமைப்பின் கூட்டத்தில், பா.ஜ.க. அரசாங்கம் இதுகுறித்து விவாதிக்கவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் பிரதிநிதிகளாக மாநிலங்களில் இருக்கும்
ஆளுநர்களிடம் கருத்துக்கேட்பது என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மறுதலிப்பதும், நாடாளுமன்றத்தின் பரிமாணங்களைக் குறைப்பதும் ஆகும்.
போதாக்குறைக்கு – மாநில உரிமைகளுக்காக, எந்த நிலையிலும் போராட விருப்பமோ – தயாராகவோ இல்லாத அ.தி.மு.க. அரசு, உயர்கல்வித்துறைச் செயலர் தலைமையில் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து கருத்துப் பெற ஒப்புக்காகக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இதில் முன்னாள் துணை வேந்தர்கள் இருவர், இப்போது பதவியில் இருக்கும் துணை வேந்தர்கள் நான்கு பேர் உள்ளனர். ஆனால், இதில் முனைவர் வசந்திதேவி போன்ற கல்வியாளர்களோ, கல்வி ஆர்வலர்களோ, ஆசிரியர் சங்க மற்றும் மாணவர் சங்கச் சார்பாளர்களோ யாரும் இல்லை. எனவே தமிழக அரசு அமைத்துள்ள குழு என்ன கூறும் என்பதை ஊகிக்க முடியும். அது கூற இருக்கும் பரிந்துரைகள் மீது பாரத்தைப் போட்டு, தந்திரமாகத் தப்பித்து விடலாம் என அ.தி.மு.க. அரசு நினைப்பதாகவே தெரிகிறது. எனவே இது ஒரு கண்துடைப்பு கமிட்டி என்றே எண்ணிட வேண்டியிருக்கிறது.
ஆகவே, புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்துக் கருத்துக் கேட்கும் குழுவில், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளையும்,புதிய கல்விக் கொள்கையின் மறுபக்க அம்சங்களைக் கூறி வரும் முன்னாள் துணை வேந்தர்களையும் சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து அங்கு விவாதிக்கப்படும் முன்பு, ஆளுநர்களிடம் கருத்துக் கேட்கும் முயற்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கைவிட்டு, நாடாளுமன்றத்தில் ஜனநாயக ரீதியான நேர்மையான விவாதங்களுக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்