ரஜினியால் வரவும் இல்லை, செலவும் இல்லை – ஆர்.எஸ் பாரதி
துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலுவை ரஜினி வாழ்த்தியதால் திமுகவுக்கு எந்தவரவும் வரப்போவதில்லை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. சமீபத்தில் திமுக பொதுச்செயலாளராக இருந்து வந்த க.அன்பழகன் மறைவையடுத்து, திமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இரு பதவியும் காலியானது.
இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போன திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பொருளாளர், பொதுச்செயலாளர் நியமிக்கப்படுவர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இரு பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு செய்த நிலையில், துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திமுகவில் தேர்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில், துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலுவை ரஜினி வாழ்த்தியதால் திமுகவுக்கு எந்தவரவும் வரப்போவதில்லை என்றும் ரஜினி வாழ்த்தாததால் திமுகவுக்கு எந்த செலவும் இல்லை என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நண்பர்கள் என்பதால் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.