விடுமுறையின்றி செப்.. 14 முதல் அக். 1ஆம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை 18 அமர்வுகளாக எந்த விடுமுறையும் இன்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஜூலை மாத இறுதியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், நடப்பாண்டில் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பட்ஜெட் தொடர் முடிந்து ஏறக்குறைய 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில், விரைவில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த வகையில் இந்தாண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை 18 அமர்வுகள் நடத்தப்படும் என்றும், எந்த விடுமுறையும் இல்லை என்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு பல கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவிலிருந்து பாதுகாக்க உறுப்பினர்களின் இருக்கைகள் சமூக இடைவெளியுடனும், பார்வையாளர் மாடங்களிலும் உறுப்பினர்கள் அமர்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் நடைபெறும் அவை நிகழ்வுகளுக்காக பிரமாண்ட திரைகள் உட்பட சிறப்பு ஒலி அமைப்புகள் என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.