எல்லை மீறுவது கூட்டணிக்கு ஆபத்து.! பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது – ஹெச்.ராஜா
எல்லை மீறி போவது கூட்டணிக்குள் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல என்று ஹெச். ராஜா பேட்டி.
கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊரவலத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், அதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அரசு பெரிதும் பெரிதுபடுத்தாமல் இருந்தது. இதனால், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விமர்சனம் செய்தார். அதாவது, கர்நாடகா மாநிலத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி வழங்கியது என்றும் ஆண்மையுள்ள அரசு என பதிவிட்டிருந்தார். இது அதிமுக அமைச்சர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை உரசி பார்க்க கூடாது என்றும் ஹெச். ராஜா சொன்ன வார்த்தைகள் அவருக்கு தான் பொருந்தும் எனவும் தெரிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன் கடந்த காலத்தில் காத்துக்கிடந்தது யார் என எல்லாருக்கும் தெரியும் என ஹெச். ராஜாவுக்கு பதிலடி கொடுத்தார். இதுபோன்று, அமைச்சர் செல்லூர் ராஜுவும் அவரை விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது மதுரையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஹெச். ராஜா, எல்லை மீறி போவது கூட்டணிக்குள் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல என்றும் கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து தான் தமிழக அரசை விமர்சித்ததே இல்லை. பாஜக இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்றும் நாடு முழுவதும் இருப்பது போல தமிழகத்திலும் பாஜகவின் நடவடிக்கைகள் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.