இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு ?

இந்த வருட கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்வதால் தற்பொழுது வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பல தளர்வுகளை அறிவித்திருந்தாலும், பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அரசு தடை விதித்துள்ளது. வழக்கமாக பள்ளிகளில் ஜூன் மாதம் துவங்கும் புதிய வகுப்பில் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக பாடங்கள் நடத்தி செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வு நடத்துவது வழக்கம்.
ஆனால் கொரோனா ஊரடங்கால் செப்டம்பர் மாதத்தில் தான் தற்பொழுது பள்ளியில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் செப்டம்பர் இறுதி வரை பள்ளிகள் கல்லூரிகள் திறக்கவும் அரசு தடை விதித்துள்ளது. எனவே வகுப்புகளே இன்னும் துவங்காத நிலையில் நிச்சயம் செப்டம்பர் மாத இறுதியில் நடக்கவேண்டிய காலாண்டு தேர்வுகள் நடக்காது என தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு நீடிக்குமானால் டிசம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் அரையாண்டு தேர்வும் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.