ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!
ஸ்டெர்லைட் வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
சுற்றுசூழலுக்கு கேடு விளைவிப்பதாக கூறி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசானது சீல் வைத்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உயர் நீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது. அனைத்து சட்ட நெறிகளுக்கு உட்பட்டு ஆலை செயல்பட்டு வந்ததாகவும், எந்தவித முன்னறிவிப்புமின்றி தமிழக அரசு சீல் வைத்ததாகவும், வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டால், தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.