தமிழகத்தில் மேலும் ஒரு எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி!
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 5000-6000 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வைரசின் தாக்கத்தால் கொரோனா களப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் என பலரையும் கொரோனா வைரஸ் பாதித்து வருகிறது. அந்தவகையில், இன்று அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், அவரது மனைவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரும், அவரின் மனைவியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.