கொரோனா நோயாளிகளுக்கு கழிப்பறையில் ஆக்சிஜன் வசதி!
கொரோனா நோயாளிகளுக்கு கழிப்பறையில் ஆக்சிஜன் வசதி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில், கழிவறை செல்லும் கொரோனா நோயாளிகள், ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்பதை தவிர்க்க, கழிவறையில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, டீன் சங்குமணி கூறுகையில், மருத்துவமனை கொரோனா வார்டுகளில் சிகிச்சைப்பெறும் உள் நோயாளிகள் கழிப்பறைக்கு செல்லும்போது ஆக்ஸிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் அதிகமாக வாய்ப்புள்ளது.
இதனால், தீவிர தொற்று உள்ளவர்களை நாங்கள் கழிப்பறைக்கு செல்ல அனுமதிப்பதில்லை. மிதமான மற்றும் அறிகுறி இல்லாத நோயாளிகள் மட்டுமே போதிய கண்காணிப்புடன் கழிப்பறைக்கு செல்ல அனுமதிக்கிறோம். அவர்களுக்கும் எதிர்பாராதவிதமாக மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனையடுத்து, கழிப்பறை வாசல் மற்றும் உள்ளேயே ஆக்ஸிஜன் வாயு வசதி ஏற்படுத்தபப்டடுள்ளது. இதனால், நோயாளிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து ஆக்ஸிஜன் வாயு கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.