கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை தடுக்க மதுபான விடுதிகளை திறக்க முடிவு!
கர்நாடகத்தில் மது விற்பனை வெகுவாக குறைந்துள்ளதால் வருகிற ஒன்றாம் தேதி முதல் பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளை திறக்க உள்ளதாக மந்திரி நாகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகள், பார்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் அரசு கொடுத்த தளர்வுகளின் அடிப்படையில், மது விற்பனைக்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும், வாங்குவதற்கு குடிமகன்கள் ஆர்வம் காட்டுவது இல்லை எனவும், இதனால் கர்நாடகத்தில் மது விற்பனை விரைவாக குறைந்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் கடந்த ஆண்டு 2019 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 62 லட்சத்துக்கும் அதிகமாக பீர் பாட்டில் பெட்டிகள் விற்பனையாகி இருந்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 53 லட்சம் பெட்டிகள் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மது விற்பனை குறைந்துள்ளது போல அரசுக்கு வருவாய் இழப்பும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கர்நாடக கலால்துறை மந்திரி நாகேஷ் அவர்கள் பேசும்போது, கொரோனா ஊரடங்கு காலத்தில் 3000 கோடி காவல்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
எட்டு மாதங்களில் இந்த வருவாய் இழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். பார்கள், கேளிக்கை விடுதிகளை திறந்தால் தான் மது விற்பனையை அதிகரிக்க முடியும், எனவே வருகின்ற ஒன்றாம் தேதி முதல் பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளை திறக்க முடிவு செய்துள்ளோம் எனவும் இது குறித்து முதல் மந்திரியிடம் பேசுவேன் அனுமதி வழங்கியதும் நிச்சயம் இதனைத் திறக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.