அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி – அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லம் முன்இருந்த தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் இனிப்பு வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்,கொரோனா காலத்தில் மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகளுடன்ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்திய போது தனித்து போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறினார். மேலும், தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து டிசம்பர், ஜனவரியில் பொதுக்குழு கூட்டி முடிவு எடுக்கப்படும் எனவும், வருகின்ற தேர்தலில் தேமுதிக கூட்டணியா..? அல்லது தனித்து போட்டியிடுமா..? என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவரிடம் பிரேமலதா பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், கூட்டணியில் சின்ன சின்ன பிரச்னைகள் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் அது சரியாகிவிடும் .எங்களை விட்டு யாரும் போகமாட்டார்கள் என நம்பிக்கை உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமைத்த கூட்டணி தற்போதும் தொடர்கிறது.பிரேமலதாவின் கருத்தால் அதிமுக பலவீனமடைந்ததாக கூற முடியாது .அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.