நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ், தலையில்லாத உடலுக்கு சமம் -ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ், தலையில்லாத உடலுக்கு சமம் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.
இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ் தலை இல்லாத உடலுக்குச் சமமாகும். மதவாத சக்திகளை எதிர்ப்பதற்கு நமது நாட்டுக்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் இன்றும் அடிப்படையாக இருப்பது நேரு குடும்பத்தின் அர்ப்பணிப்பாகும்.
நேரு குடும்பத்தின் தலைமையைப் பற்றி கேள்வி எழுப்பும் சிலர் முதலில் அவர்களுடைய தகுதியை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் ராகுல் காந்தி செயல் தலைவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வழிகாட்ட வேண்டும் என்பதே என்னைப் போன்ற காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாகும்.
தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் நேரு குடும்பத்தின் தன்னலமற்ற சேவையே நமது மாபெரும் நாட்டையும் கட்சியையும் வழிநடத்த முடியும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.