என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி சங்கர் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்ற பரிந்துரை!
சென்னை அயனாவரத்தில் போலீஸாரால் என்கவுண்டர் செய்துகொள்ளப்பட்ட ரவுடி சங்கரின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் கடந்த 21ஆம் தேதி அதிகாலை சென்னை காவல் துறையினரால் பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி சங்கர் மீது 4 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உட்பட 50 வழக்குகள் உள்ளது. இவர் மீது 5 முறை வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது, 9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் பிடிபட்ட போது தான் இவருக்கு கடைசியாக எனக்கவுண்டர் நடைபெற்றுள்ளது.அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து, சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் மற்றும் அவரது சகோதரி ரேணுகா ஆகியோர் சங்கரின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் அவரை சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர் நடராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக எழும்பூர் பெருநகர குற்றவியல் ஐந்தாவது நீதிமன்ற நீதிபதி சக்திவேல் கண்ணனிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து ரவிசங்கரின் உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். என்கவுண்டரின் போது காயமடைந்த காவலர் முப்பாரக்கிற்கு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரவிசங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது.