அரசு உத்தரவை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை போலீசாரால் பறிமுதல் .!
தமிழக அரசின் உத்தரவை மீறி தென்காசி, செங்கோட்டையில் இந்து முன்னணி நிர்வாகிகள் வைத்த விநாயகர் சிலை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
விநாயக சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சில இந்து அமைப்புகள் அரசின் உத்தரவை மீறி சிலைகளை வைக்க போவதாகவும், ஊர்வலம் நடத்த போவதாகவும் கூறியதை அடுத்து சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தடைகளை மீறி தென்காசி, செங்கோட்டையில் இந்து முன்னணி நிர்வாகிகளால் வைக்கப்பட்ட விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டதுடன் திருவண்ணாமலையில் செய்யாறு காந்தி சாலையில் அமைந்துள்ள பாதாள விநாயகர் கோவிலில் உத்தரவை மீறி விநாயகர் சிலைகளை வைத்ததற்காக 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்து முன்னணி நிர்வாகிகளால் அமைக்கப்பட்ட இரண்டரை அடி உயரமுள்ள விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டு, இந்து முன்னணியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.