கொரோனா தடுப்பூசி கண்டறிந்தால் முதலில் யார் பெறுவார்கள்.? WHO-வின் பதில் இதோ!
கொரோனா தடுப்பூசி கண்டறிந்தால் யார் முதலில் பெறுவார்கள்? என மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளது.
அதன்படி, காவல்துறை, நகராட்சி ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள், மருத்துவர்கள் போன்ற கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கப்படும்.
கொரோனா நோய் தொற்று முடிவுக்கு வருவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. அது, மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்டளவில் தொற்று உருவானப்பின், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அமைவது, அல்லது விரைவில் கொரோனாவை எதிர்த்து ஒரு தடுப்பூசியை கொண்டுவருவது.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி ஆகிய இரண்டும் வேறுபட்ட விஷயங்களாக கருதப்பட்டாலும், ஒரு தடுப்பூசி பயனுள்ளதாக இருக்க, நோய் எதிர்ப்பு சக்தியின் கொள்கைகளும் பொருந்தும் என்பதே உண்மை. அதுமட்டுமின்றி, உலகளவில் உள்ள 8 பில்லியன் மக்களுக்கும் தடுப்பூசி போடுவது என்பது தற்பொழுதுள்ள நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம்.
மேலும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிந்தாலும், அது 100 சதவீதம் பயனுள்ளதாக இருக்காது. அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணரான டாக்டர் அந்தோனி ஃபாசி போன்ற நிபுணர்கள், “70 -75 சதவிதம் பயனுள்ள ஒரு தடுப்பூசி கிடைத்தால் நாம் அதிர்ஷ்டசாலி” என கூறிவருகின்றனர்.
இந்தநிலையில், பெரும்பாலான மக்களிடையே ஒரு கேள்வி எழுந்துள்ளது. அது, “கொரோனாவுக்கு தடுப்பூசி வந்தால், அதனை யார் முதலில் பெறுவார்கள்? ஏன்?” போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அடுத்த ஆண்டின் முதல் பாதியில் நம்மிடம் ஒரு தடுப்பூசி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் எந்த நிறுவனம் அல்லது ஆய்வகம் முன்னேற்றம் கண்டது என்பதைப் பொறுத்து, ஒரு அரசாங்கத்துடன் நிறுவனத்தின் ஒப்பந்தப்படி, தடுப்பூசியின் முதல் 100 மில்லியன் டோஸ் எங்கு செல்கிறது என்பதை தீர்மானிக்க முடியும்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற பணக்கார நாடுகள் ஏற்கனவே தடுப்பூசி உருவாக்கி வருபவர்களுடனான முன்னேற்றத்தை எதிர்பார்த்து, தடுப்பூசி உருவாகும் முன்னே, ஒப்பந்தங்கள் பல கையெழுத்தாகியுள்ளது. ஆனால் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு தடுப்பூசி தேசியவாதத்தின் ஆபத்துகளுக்கு எதிராக வெளிப்படையாக எச்சரித்துள்ளது. மேலும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், “தடுப்பூசி தேசியவாதத்தை நாங்கள் தடுக்க வேண்டும்” என கூறினார்.
இந்தியா போன்ற ஒரு நாட்டைப் பொறுத்தவரை, மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பது என்பது அரசாங்கத்தால் மட்டுமே உறுதி செய்யக்கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்து.