14.44 கோடி மதிப்பிலான 26 திட்டங்களை நாமக்கல்லில் முதல்வர் இன்று துவக்கி வைத்தார்!
நாமக்கல்லில் 14.44 கோடி ரூபாய் மதிப்பிலான 26 திட்டங்களை முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 14.44 கோடி ரூபாய் மதிப்பிலான 26 திட்டங்களை இன்று முதல்வர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். மேலும் 137.65 கோடி மதிப்பிலான 130 புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்பொழுது நாமக்கல் மாவட்டம் கொரோனா தடுப்பில் முன்னணி மாவட்டமாகத் திகழ்கிறது. கொரோனாவின் தாக்கமும் நாமக்கல்லில் கட்டுக்குள் உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும். ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும் பொழுது மக்கள் மாஸ்க் அணிந்து செல்வது முக்கியமானது மற்றும் வீடுகளை நன்றாக சுத்தமாக வைத்திருங்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நாமக்கல் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் மாவட்டம் என்று சொன்னாலும் மிகை ஆகாது என நாமக்கல் மாவட்டத்தை புகழ்ந்து பேசியுள்ளார் முதல்வர். மேலும், ஜவ்வரிசி உற்பத்தியிலும் முட்டை உற்பத்தியில் முன்னோடியாக இருக்கக் கூடிய நாமக்கல் மாவட்டம் லாரி தொழிலுக்கு பெயர் பெற்ற மாவட்டமாக விளங்குகிறது. விரைவில் நாமக்கல்லில் காணக்கூடிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.