விநாயகர் சதுர்த்தியில் தளர்வுகள் அளிக்க  முடியுமா ? தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

விநாயகர் சதுர்த்தியில் தளர்வுகள் அளிக்க  முடியுமா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை  விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும்,  நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது.  தடையை மீறி விநாயகர் சிலை வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை  எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து,  பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட  தமிழக அரசு வலியுறுத்தியது.இதனிடையே  சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று  சிலையை கரைக்க அனுமதி கோரி கணபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழிபாட்டுக்கு பின் விநாயகர் சிலைகளை மக்கள் பெரிய கோவில் அருகில் வைக்க அனுமதி வழங்கலாமா..? மக்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் சிலை வைக்க அனுமதி கொடுக்கப்படுமா..? ஆனால், கொரோனா  சூழலில் மிகப்பெரிய ஊர்வலங்கள் அனுமதிக்க முடியாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று தெரிவித்தது.

மேலும், கொரோனா விதிகளை பின்பற்றி ஐந்து அல்லது ஆறு நபர்கள் சிலையை  கொண்டு செல்ல அனுமதி உள்ளதா..? மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தியில் தளர்வுகள் அளிக்க  முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து இன்று விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.