ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழ் மாணவர்களின் உடல்கள் 22ம் தேதி சென்னை வந்தடையும் – எல். முருகன்.!

Default Image

ரஷ்யாவின் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்த தமிழ் மாணவர்களின் உடல்கள் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை வந்தடையும் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் வோல்காகிராட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைகழகத்தில் தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு சென்று குளிக்கும் போது ஒரு மாணவரை தண்ணீர் அடித்து சென்று விட்டது. அவரை காப்பாற்ற முயற்சித்த சக மாணவர்களில் மூன்று பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ் மற்றும் சேலத்தை சேர்ந்த மனோஜ் என்பது தெரிய வந்துள்ளது.

இறந்த 4 பேரின் உடலை விரைவில் தமிழகம் கொண்டு வருமாறு மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது மாணவர்களின் உடலை வரும் 22-ம் தேதி சென்னை கொண்டு வரப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழக மாணவர்களின் உடலை மீட்டு தமிழகம் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியதாகவும், அதனையடுத்து ரஷ்யாவில் உள்ள தூதரகம் மூலம் உடலை மீட்டு கொண்டு வர மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு. முரளிதரன் தெரிவித்ததாக கூறினார்.

இதனை தொடர்ந்து நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் வந்துள்ள தகவலின்படி, வோல்காகிராட்டிலிருந்து மாணவர்களின் உடல்கள் மால்கோவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இன்று (18-8-2020) உடல்கள் இஸ்தான்புல் கொண்டுவரப்பட்டு, ஆகஸ்ட் 21 அன்று துருக்கி விமானம் மூலம் இஸ்தான்புல்லிருந்து புறப்பட்டு ஆகஸ்ட் 22-ம் தேதி உடல்கள் சென்னை வந்தடையும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழர் நலனுக்காக அயராது உழைக்கும் பாரத பிரதமருக்கும், தமிழர்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்பட்ட தூதரக அதிகாரிகளுக்கும், உடலை கொண்டு வர உறுதுணையாக இருந்து வரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முரளிதரன் அவர்களுக்கு நன்றி என்று எல். முருகன் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்