ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம், யூனியன் பேங்க் உள்பட 8 வங்கிகளில் 1,300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி!
1394 கோடி ரூபாய் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி உட்பட 8 வங்கிகளில் மோசடி செய்திருப்பதாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது.
வங்கி அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு மோசடி செய்யும் நிறுவனங்களின் வரிசையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த, உட்கட்டமைப்பு நிறுவனமான, டோடம் இன்ப்ராஸ்சக்ச்சர் லிமிடெட் (Totem Infrastructure Limited), புதிதாக இணைந்திருக்கிறது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட 8 வங்கிகளில் இந்த நிறுவனம், ஆயிரத்து 394 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்திருக்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, டோடம் இன்ப்ராஸ்சக்ச்சர் லிமிடெட் (Totem Infrastructure Limited) நிறுவனத்தின் உரிமையாளர் சலாலீத், கவிதா மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்திருக்கிறது. தங்கள் வங்கியில் 304 கோடி ரூபாய் அளவிற்கு டோடம் இன்ப்ராஸ்சக்ச்சர் லிமிடெட் (Totem Infrastructure Limited) நிதிபெற்று மோசடி செய்துவிட்டதாக, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அளித்த புகாரை அடுத்து, சிபிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
சாலைகள் அமைப்பது, குடிநீர் திட்டங்களை மேற்கொள்வது, கட்டிட கட்டுமானங்கள் ஆகிய பணிகளை மேற்கொண்ட டோடம் இன்ப்ராஸ்சக்ச்சர் லிமிடெட் (Totem Infrastructure Limited), அவற்றை காரணம் காட்டி ஒவ்வொரு வங்கிகளிலும் கடன் பெற்றது. வாங்கிய கடனை அடைக்காத அந்த நிறுவனம், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதுபோல் போலியாக கணக்கு காண்பித்து, பணத்தை வேறு வழிகளில் பதுக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு இடையில், கடனையும், வட்டியையும் செலுத்தவில்லை என்பதால், கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி, வாரா கடனாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், போலியான தகவல்களை அளித்து வங்கியில் கடன்பெற்று மோசடி செய்துவிட்டதாக, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அளித்த புகாரை அடுத்தே, டோடம் இன்ப்ராஸ்சக்ச்சர் லிமிடெட் (Totem Infrastructure Limited) மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, அதிரடி விசாரணையில் இறங்கியதில், 8 வங்கிகளில் ஆயிரத்து 394 கோடி மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.