சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த சிபிஐ விசாரணை அறிக்கை.!
சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ தங்களது விசாரணை அறிக்கையை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூரமான சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியது.
இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல அரசியல் பிரமுகர்களும், ரஜினி, கமல் உட்பட அனைத்து பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் இந்த வழக்கு தொடர்பாக கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையில், தந்தை மற்றும் மகனை விடிய விடிய லத்தியால் அடித்து துன்புறுத்தியதாகவும், அதற்கான ரத்தக்கறைகள் லத்தி மற்றும் மேசையில் படிந்திருந்ததாகவும் பெண் காவலர் ரேவதி நேரடி வாக்குமூலம் அளித்ததாக வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போது இந்த விசாரணையை தமிழக அரசு சிபிசிஐடி போலீசாரிடமிருந்து சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, குற்றவாளிகள் என கூறும் சாத்தான்குளம் ஆய்வாளரான ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்களான ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 10 பேரை கொலை மற்றும் தடயங்கள் அழித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகனின் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அறிக்கையை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ளனர்.
கொரோனா சூழல் காரணமாக வழக்கின் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நீதிபதிகள் சிபிஐ விசாரணை திருப்திகரமாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.