கெயில் எரிவாயு குழாய் பதிக்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் – சீமான்

Default Image

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று  சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,காவிரி சமவெளி வேளாண் பெருங்குடி மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள காவிரி சமவெளிப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களால் அச்சமடைந்திருந்த விவசாயப் பெருங்குடி மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டபோது அதில் அரசின் அறிவிப்புக்கு மாறாக திருச்சி, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் விடுபட்டிருந்தது.

மேலும், அந்தச் சட்டத்தின் 4(2)(a) பிரிவு, இச்சட்டம் செயற்பாட்டுக்கு வரும் முன் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்படாது; தொடர்ந்து செயல்படும் என்றும் கூறப்பட்டிருந்தது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. தற்போது காவிரி சமவெளி பகுதியில் மீண்டும் தொடங்கியுள்ள கெயில் எரிகுழாய் பதிப்பு பணிகள், விவசாயிகளின் அச்சம் சரியானதுதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் 1984-ம் ஆண்டிலிருந்து ஒ.என்.ஜி.சி நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகளை அமைத்து வருகிறது. 1984-ம் ஆண்டில் இருந்து தற்போதுவரை மொத்தமாக 768 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 187 கிணறுகள் (திருவாரூரில் 78, நாகையில் 57, தஞ்சையில் 12, கடலூரில் 4, அரியலூரில் 1, இராமநாதபுரத்தில் 35) என மொத்தமாக 187 கிணறுகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. 2019-ம் ஆண்டில் மட்டும் தமிழகம், புதுவையில் வேதாந்தா நிறுவனம் 274 கிணறுகளும், ஓ.என்.ஜி.சி 215 கிணறுகளும் என மொத்தமாக 489 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

அரசு அறிவித்துள்ள கொள்கையின்படி, ஏற்கனவே மூடப்பட்ட கிணறுகள் மற்றும் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் கிணறுகள் உட்பட அனைத்து கிணறுகளும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்தான். இப்போது எண்ணெய்க் கிணறுகளாக இருக்கும் கிணறுகளில்கூட, நாளை நீரியல் விரிசல் (Hydraulic fracking) முறைப்படி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள முடியும் என்று சூழலியல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். இந்தப் புதிய கிணறுகளுடன் சேர்த்து ஏற்கனவே இருக்கும் 768 கிணறுகளையும் தடையின்றி செயல்பட அனுமதிப்பதுதான் அரசின் திட்டம் என்றால் `பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என்ற அரசின் பேரறிவிப்பு, பன்னாட்டு நிறுவனங்களின் வளச்சுரண்டலுக்குத் தடையாக இருந்த விவசாயிகள், பொதுமக்களைத் திசைதிருப்பவே என்பது வெட்டவெளிச்சமாகிறது.

மேலும், நிலமும் வேளாண்மையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹைட்ரோ கார்பன் போன்ற கனிமங்கள் மத்திய அரசின் கீழ் வருவதால் 2019-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதியே போதுமென்றும், மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதியைத் தனியாகப்பெறத் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை என்றாகிவிடுகிறது.

இவையெல்லாம் தமிழக அரசு கொண்டுவந்த காவரிச்சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டத்தை பயனற்றதாக்கும் மறைமுக செயல்திட்டங்களே.

எனவே தமிழக அரசு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்ததை பெயரளவில் மட்டுமின்றி உண்மையிலேயே செயல்படுத்திட,

(1) தற்போது நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் நடைபெறும் கெயில் எரிவாயு குழாய் பதிப்புப் பணியினை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

(2) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தில் விடுபட்டுப்போன மாவட்டங்களிலுள்ள காவிரி சமவெளிப் பகுதிகளையும் சேர்க்க வேண்டும்.

(3) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்டத்தையே நீர்த்துபோகச் செய்யும் பாதகமான சட்டப்பிரிவுகளை நீக்க வேண்டும்.

(4) வேளாண் நிலங்கள், நீர் நிலைகள், நிலத்தடிநீர் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள அல்லது கைவிடப்பட்ட எந்தவொரு திட்டத்தையும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக் கூடாது.

(5) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக வேளாண் பேரறிஞர்கள், விவசாயிகள், சூழலியல் ஆய்வறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்து அவர்களின் கருத்துகள் பெறப்பட்டு, தேவையான சட்டத்திருத்தம் செய்து அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெறவேண்டும்.

(6) வளர்ச்சி என்ற பெயரில் கெயில், சாகர்மாலா, பெட்ரோலிய முதலீட்டு மண்டலம், ஹைட்ரோகார்பன் என்று புதிய புதிய திட்டங்களை வேறு வேறு பெயரில் கொண்டுவந்து விவசாய நிலங்களை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் பேரழிவுத் திட்டங்களை தமிழக அரசு எவ்வகையிலும் அனுமதிக்க கூடாது.

(7) மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்குப் பதிலாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியே போதும் என்பது போன்ற மாநில அரசுகளின் இறையாண்மையைப் பாதிக்கக் கூடிய மத்திய அரசின் ஒற்றையாட்சிக் கொள்கை முடிவுகளுக்கு எதிராக தமிழக அரசு உறுதியான அரசியல் மற்றும் சட்டப்போராட்டத்தை மேற்கொண்டு அவற்றை திரும்பப்பெறச் செய்யவேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதன் மூலம் தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான தனது அறிவிப்பின் நோக்கத்தை முழுமைப்படுத்தி தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் காத்திட முன்வரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning