EIA தமிழ் மொழிபெயர்ப்பு தயாராக உள்ளது – மத்திய அரசு
சூழலியல் தாக்க மதிப்பீடு 2020″ வரைவு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு தயாராக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது.இதன்படி, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் திட்டமாக இருப்பின் அதற்கு அனுமதி மறுக்கவும் ,ஆபத்து ஏற்படுத்தாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்குவதும் குறித்து அரசு அமைத்த குழு ஆய்வு செய்யும்.
இதற்கிடையில் புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது. ஆனால் “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” வரைவிற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் சுற்றுசூழல் வரைவு அறிக்கைக்கு தடை கோரி மீனவர் நல சங்கம் சார்பில் செல்வராஜ் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில், பிராந்திய மொழிகள் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை வெளியிடும் வரை தடை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுற்றுசூழல் வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அதாவது ,சுற்றுசூழல் வரைவு தமிழ் மொழிபெயர்ப்பு தயாராக உள்ளது என்று தெரிவித்தது.மேலும் அவகாசம் வழங்கி வழக்கினை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையயடுத்து மத்திய அரசு எழுத்து பூர்வமாக பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கினை ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.