நேரம் சரியில்லாத ஜோதிடர்!இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்…. பாலியல் வழக்கில் கைது..!
இளம் பெண்களிடம் சேலத்தில் திருமண தோசம் கழிப்பதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வில்லங்க ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். 7 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த ஜோதிடர் போலீசில் சிக்கிய பின்னணி
சேலம் மாவட்டம் கே.ஆர். தோப்பூரில் ஸ்ரீ அருள் தவசி ஜோதிடாலயா என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வந்தவர் பன்னீர் செல்வம்…! குமரன் குடில் என்ற பங்களா வீட்டில் பெண்களுக்கு திருமணம் தோசம் , பிள்ளை பேறு தோசம் கழிப்பதாக கூறி மந்திர தந்திர வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
மகளின் திருமணத்திற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வயதான தம்பதிகள் சோதிடன் பன்னீர் செல்வத்தை அணுகியுள்ளனர். ஜாதகத்தைப் புரட்டிப் பார்த்த பன்னீர்செல்வம், பெண்ணுக்கு தோஷம் இருப்பதாகவும், அவரை நேரில் அழைத்து வந்தால் பரிகாரம் செய்து விடலாம் என்று கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பி கடந்த 10 நாட்களுக்கு முன் தனது மனைவி மற்றும் 18 வயது மகளை அழைத்துக் கொண்டு காரில் காலை 11மணிக்கு தோப்பூர் பகுதியில் உள்ள ஜோதிடர் இல்லத்திற்கு அந்த நபர் சென்றுள்ளார். அங்கு தயாராக இருந்த ஜோதிடர் பன்னீர் செல்வம், பெற்றோர் கையில் இரண்டு மண் விளக்குகளை கொடுத்து பூஜை அறைக்கு வெளியில் காவலுக்கு நிற்க வைத்து விட்டு இளம்பெண்ணை மட்டும் அழைத்து கொண்டு பூஜை அறைக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளார்.
அங்கு வைத்து தோசம் கழிப்பதாக கூறி அந்த இளம்பெண்ணை சீண்டியுள்ளார் ஜோதிடர் பன்னீர் செல்வம். அவர் வெளியில் செல்ல முயன்றதும் அவரை பிடித்து அமரவைத்து வேக வேகமாக மந்திரங்களை உச்சரித்துள்ளார். தனது விருப்பத்திற்கு ஒத்துழைக்காவிட்டால், மந்திர சக்தியால் தாய் தந்தையரை முடமாக்கி, அந்த பெண்ணையும் நடக்க முடியாதபடி செய்து விடுவேன் என்று கூறி மிரட்டி அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அறையில் பொறுத்தப்பட்டிருந்த ரகசிய காமிரா மூலம் அவன் செய்யும் அத்துமீறல்களை வீடியோவாகவும் எடுத்துள்ளான்.
இது கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கை என்றும் இதை வெளியில் சொன்னால் தான் ரகசிய கேமரா மூலம் எடுத்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று காம ஜோதிடன் பன்னீர் செல்வம் மிரட்டியதாக கூறப்படுகிறது !
பூஜை அறையில் இருந்து சுமார் 1 மணி நேரம் கழித்து அந்த பெண்ணுடன் வெளியே வந்த ஜோதிடன், 4 நாட்கள் கழித்து மறுபடியும் அழைத்து வாருங்கள் இன்னும் ஒரு பூஜை பாக்கி இருக்கிறது திருமண தோசம் எல்லாம் நீக்கி விடலாம் என்று பெற்றோரிடம் பேசி அனுப்பி இருக்கிறான்.
காரில் வீடு திரும்பும் வழியில் மகள் ஏதும் பேசாமல் கண்ணீர்மல்க இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், என்னவென்று விசாரிக்கையில் தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் சொல்லி கண்ணீர் விட்டு கதறியுள்ளார் அந்த இளம் பெண்..!
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் உடனடியாக ஜோதிடன் பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு சென்று அங்கேயே வைத்து அவருக்கு தர்ம அடி கொடுத்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பன்னீர் செல்வத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தோசம் கழிப்பதாக கூறி தனது பூஜை அறைக்கு அருகில் இருக்கின்ற ரகசிய அறைக்கு அழைத்துச்சென்று பல பெண்களிடம் இதுபோன்று பாலியல் வன்கொடுமையிலும் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டதையும், 7 பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததையும் அவரே ஒப்புக்கொண்டு பகீர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜோதிட வில்லன் பன்னீர் செல்வம் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்
ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை பயன்படுத்தி தோசம் கழிப்பது, பரிகாரம் செய்வது போன்ற மூட நம்பிக்கைகளை விதைத்து, பணத்தை கறப்பதோடு மட்டுமில்லாமல் பெண் பிள்ளைகளின் வாழ்க்கையோடு விளையாடும் இது போன்ற ஜோதிட வில்லன்களிடம் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு சாட்சியாக நடந்திருக்கிறது இந்த சம்பவம்..!
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.